TAMIL NEWS

இஸ்ரோவின் நூறாவது விண்வெளித் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது

ஞாயிறு, செப்டம்பர் 9, 2012
இஸ்ரோ எனப்படும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 100 வது விண்வெளித் திட்டமான பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முதல் விண்வெளித் திட்டம் ஆர்யபட்டா ஏவுதலுடன் 1975 ஆம் ஆண்டு தொடங்கியது. இன்றைய வெற்றிகரமான ஏவுதல் மூலம் 100 விண்வெளித் திட்டங்களை முடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

வெள்ளியன்று தொடங்கிய 51 மணிநேர கணக்கீட்டுடன் முடிவில் பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் இந்திய நேரப்படி இன்று காலை 9.53 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவின் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவூர்தியில் பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-6 மற்றும் ஜப்பானின் புரோயிடர்ஸ் ஆகிய இரு செயற்கைக்கோள்கள விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் பார்வையிட்டார். இந்திய விண்வெளித் துறையையும், இந்திய விண்வெளி நிறுவனத்தின் அனைத்து நபர்களையும் வாழ்த்துவதாக இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் புதன் கோளின் சூழ்நிலையை ஆராய "மங்கல்யான்" எனப்படும் ஆளில்லா விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

 

 

 

டோன் விண்கலம் வெஸ்டா சிறுகோளை விட்டு விலகி செரசு குறுங்கோளை நோக்கிச் செல்கிறது

வியாழன், செப்டம்பர் 6, 2012
வெஸ்டா சிறுகோளின் (asteroid) சுற்றுவட்டத்தில் கடந்த 13 மாதங்களாகத் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நாசாவின் டோன் என்ற ஆளில்லா விண்கலம் தனது திட்டத்தை முடித்துக் கொண்டு வெஸ்டாவை விட்டு விலகிச் செல்வதாக நாசா அறிவித்துள்ளது.


ஓவியரின் கைவண்ணத்தில்  டோன் விண்கலமும் வெஸ்டா (இடது) சிறுகோளும், செரசு குறுங்கோளும் (வலது)
530 கிமீ அகலமுள்ள வெஸ்டா பாறையின் ஈர்ப்பில் இருந்து விலகியதை டோன் விண்கலத்தில் இருந்து நேற்றுப் புதன்கிழமை கிடைக்கப்பெற்ற சமிக்கை உறுதிப்படுத்தியதாக நாசா தெரிவிக்கிறது.

தற்போது இது செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் உள்ள சிறுகோள் பட்டையில் உள்ள 950 கிமீ அகலமான செரசு என்ற குறுங்கோளை நோக்கிச் செல்கின்றது. 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இது செரசுவை அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


டோன் விண்கலம் 2007 செப்டம்பர் 27 ஆம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்டது. இது 2011 சூலை 16 ஆம் நாள் வெஸ்டாவின் சுற்றுப்பாதையை அடைந்தது. 2015 பெப்ரவரியில் செரசு குறுங்கோளை அடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அடையும் முதல் விண்கலமாக இதுவாகும்.




கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் இலங்கை வந்து சேர்ந்தன

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012
இந்தியாவில் உள்ள பௌத்தர்களின் புனிதத் தலமான கபிலவஸ்துவில் புத்தரின் புனித சின்னங்கள் சில இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில், அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச இப்புனிதச் சின்னங்களை இந்திய கலாசார அமைச்சர் குமாரி சேல்யாவிடம் இருந்து பொறுப்பேற்றார்.

களனி மானல்வத்த விகாரைக்கு இச்சின்னங்கள் கொண்டு செல்லப்பட்டு செப்டெம்பர் 4 ஆம் திகதிவரை அங்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். 1978 ஆம் ஆண்டில் இந்தப் புனிதச் சின்னங்கள் இலங்கைக்கு முதன் முறையாகக் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்னர் மொங்கோலியாவில் 1993 இலும், சிங்கப்பூரில் 1994 இலும், தென்கொரியாவில் 1995 இலும், தாய்லாந்தில் 1996 இலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. தற்பொது மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இலங்கைக்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் என அழைக்கப்படும் இச்சின்னங்கள் பீகார் மாநிலத்திலுள்ள புராதன கபிலவஸ்து நகரம் என கருதப்படும் பகுதியில் பிப்பிராவா என்ற இடத்தில் 1898 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.